தண்டச் சோற்றுத் தடிராமன்கள்

எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.


"நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன்.


இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார்.


சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள்.


அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான்.


மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.

அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான்.


முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான்.


"மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர்.


"இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன்.


"மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு."நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன்.


அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன்.


மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும் மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை.


"வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான்.


"சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது


"அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு.


"இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன்.


பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன.


எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன.


அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.


பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.


அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.

தொப்பை கரைச்சான் லேகியம்

திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.


"குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றான் மட்டி.


குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!" என்று பயம் காட்டினான் மடையன்.


"ஐயையோ!" என்று அலறிய பரமார்த்தர், "இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார்.


"சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்" என்று யோசனை சொன்னான் மண்டு.


"வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!" என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.


உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.


"குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்" என்றபடி கீழே குதித்தான்.


எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், "சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்" என்று அனுப்பி வைத்தார்.


காட்டுக்குச் சென்ற சீடர்கள், "தொப்பை கரைச்சான் மூலிகை" எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.


அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.


"முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?" என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.


கோபம் கொண்ட முனிவர், "எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!" என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!


முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.


சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். "நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!" என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, "சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.


முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.


எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.


அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். "எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்" என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.


"பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது


முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.


"குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!" என்று கூறினான், மட்டி.


பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.


"குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!" என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.


பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.


அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.


நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. "ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!" என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.


தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.


மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.


இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!" என்று ஆணையிட்டான்.


சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.


"குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது" என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.


"லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!" என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.


சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.


"போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.


தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.


சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.


திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.


முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.


அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

மறைக்க முடியாத பொய் - நகைச்சுவை கதை

ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.


பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.


அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.


"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.


"நான் இல்லை", "நான் இல்லை" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து "நான் தின்னவில்லை" என்று சொன்னாள்.


"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் ஜானகி ஆன்ட்டி.


பட்டுக்குட்டி பயந்துபோய், "இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்.


"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன?" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.

புகழ்பெற்ற சிரிப்பு - தமிழ் ஜோக்ஸ்

"உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க?"


"பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி"
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?"


"கடினமான கல்விமுறைதான் காரணம்னு விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல மாட்டான்." "யாரவன்?"


"செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"


"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
இன்ஸ்பெக்டர்: என்னது... இருபது கான்ஸ்டபிள்கள் சேர்ந்து போய் வெறும் ஆயிரம் ரூபா பெறுமானமுள்ள கள்ளச் சாராயத்தைத்தான் அழிக்க முடிஞ்சதா ஏன்...?


கான்ஸ்டபிள்: இருபதுபேரால், அதுக்கு மேலேயா சார் 'குடிக்க' முடியும்...?"