கவிதை -- உன்னை உனக்கு முதலில் அறிமுகம்

உன்னை உனக்கு முதலில் அறிமுகம்

உன்னை உனக்கு
முதலில் அறிமுகம் செய்தது
நான்தான் !

என் கனவுகளை
அடுக்கியபோது
சரியாய் உன் உயரம் இருந்தது

அடர்த்தியான மழையின்
சப்தம் நான்
மழைக்குப் பின் வரும்
நிசப்தம் நீ

கனவுகளின் கனவு நீ

காற்றைப் பிசைந்து
பொம்மை செய்ய
கடவுள் முயற்சிக்கையில்
நீ கிடைத்தாய் !

காதல்
எனக்குப் பேச்சுப் போட்டி
உனக்கு மௌன விரதம்

பிரம்மன் படைத்த ஓவியம் நீ
அவன் தூக்கிப் போட்ட தூரிகை
நான்

உன் காதல் கிடைக்குமென்று
நான் எற்கெனவே
சபிக்கப்பட்டிருக்கிறேன் !

நம் வாழ்வில்
மன்னிக்க முடியாத தவறு
நம் முதல் சந்திப்பு

மரணமற்ற வாழ்விக்கு
சாத்தியம் இருந்தது
உன்னைப் பார்க்கும் முன்

என் காதலை
ஏற்றுக்கொண்டபோது
அழகாய் இருந்தாய்
மறுத்தபோது
இன்னும் அழகாய் இருந்தாய் !





பூமி ஒரு மைதானம்

பூமி ஒரு மைதானம்
கோல் விழுந்தா கொண்டாட்டம் !

எட்டி எட்டி உதைக்கிறாங்க
எனக்குப் புடிக்கலை
உசுரில்லாத பந்துன்னாலும்
மனசு கேக்கலை

ஒரு பந்து படும் உதையை
உலகமெல்லாம் பல பேரு
கை தட்டி ரசிக்கிறாங்க
என்ன நியாங்க ?

பட்ட உதை எத்தனையோ
லாபம் என்னங்க ?
பந்துக்கா குடுக்குறாங்க
பரிசு சொல்லுங்க ?

புத்திசாலி மனுஶனுங்க
புரிஞ்சுபோச்சுங்க
பந்துக்குத் திருப்பி உதைக்க
பாதம் இல்லீங்க !

மனுஶன் காற்றடைத்த
பந்துதானுங்க
மூச்சுக்காத்து நின்னுச்சுன்னா
முடிஞ்சுபோச்சுங்க

பூமியொரு மைதானம்
போட்டி போடுங்க
எத்தனை பேர் தடுத்தாலும்
ஜெயிக்கப் பாருங்க

கோல் விழுந்தா கொண்டாட்டம்
கையைத் தட்டுங்க
அது வரைக்கும் போராட்டம்
ஆட்டம் நடத்துங்க

ஓண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்
வெற்றி நிச்சயம்
உதைக்கும் போதும் துள்ளிக் குதிக்கும்
மனசு முக்கியம் !