பஸ்சுக்குள் ஒரு பதட்டம்

நான் பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும் என் பக்கத்தில் அமர்ந்து பயணித்தார்.

பேருந்து திண்டிவனத்தை நெருங்கும் போது அந்த வாலிபர் `ஆ'வென்று அலறியபடி காலை நீட்டிக்கொண்டு என் மீது சாய்ந்தார். என்னவென்று சுதாரிப்பதற்குள் அவர் கைகளை மடக்கிக் கொண்டு இழுக்க ஆரம்பித்து விட்டது.

பிறகுதான் தெரிந்தது அவருக்கு `வலிப்பு நோய்' இருப்பது. பிறகு அவரைப் பிடித்து ஆசுவாசப்படுத்தி சென்னை வருவதற்குள் சரியாகி விட்டது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இவ்வளவு நடந்தபோதும், எங்க ளுக்கு பின்னால் உள்ள இருக்கையில் தான் நடத்துனர் இருந்தார்.

அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. சக பயணிகள் தான் அவருக்கு உதவினோம். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓட்டுனரும், நடத்துனரும் தானே பொறுப்பு. பயணிகள் விஷயத்தில் இதுமாதிரியான நேரங்களில் எந்த மாதிரியான முதலுதவி மேற்கொள்ள வேண்டும்...அவர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை சிறப்பாக டிரைவர், கண்டக்டருக்கு அளிப்பது நல்லது.